#Vehicles | #police "போலீசார் பறிமுதல் செய்யும் வாகனங்கள்..." - நீதிபதி சொன்ன கருத்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் பல வருடங்களாக திறந்த வெளிகளில் நிறுத்தப்படுவதால் பயனற்றதாகி விடுவதாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த சேவியர் என்பவர் தனது வாகனத்தை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி முகமது ஷாபிக், குற்றவியல் புதிய சட்டத்தின்படி, காவல்துறை பறிமுதல் செய்யும் வாகனங்களை இடைக்காலமாக விடுவிப்பதற்கு சட்ட வழிவகை உள்ளதாக குறிப்பிட்டார். இதுபோன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் பல வருடங்களாக திறந்த வெளிகளில் நிறுத்தப்படுவதால், வெயில், மழை போன்ற காலநிலை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு காலப்போக்கில் துருப்பிடித்து பயனற்றதாகி, அதன் மதிப்பீடு குறைந்து பழைய இரும்பு கடைகளுக்கு செல்வதாகவும், இதனை கருத்தில் கொண்டு நிபந்தனைகளுடன் வாகனங்களை விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். வாகனத்தின் உரிமையாளர் இனிமேல் சட்டவிரோத செயல்பாடுகளில் தனது வாகனத்தை ஈடுபடுத்த மாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும் - வாகனத்தின் உண்மையான பதிவு ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.