#sivagangai | #crimenews ஒரே நாளில் 2 இளைஞர்கள் கொலை - பழிக்கு பழியால் பதற்றத்தில் சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் பழிக்குப் பழியாக தொடரும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இரண்டு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்றொரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லல் அருகே பொரட்டி கிராமத்தில், காரைக்குடியைச் சேர்ந்த 25 வயதான நவீன் என்பவரை மர்ம கும்பல் விரட்டிச் சென்று கொலை செய்துள்ளது. சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்திருந்த இவர், நண்பர்களைச் சந்திக்கச் சென்றபோது கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல், மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சான் கிராமத்தில், 23 வயதான விக்னேஷ் என்பவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. அவருடன் இருந்த நண்பர் முனீஸ்வரன் படுகாயமடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு கொலைச் சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம், பழிக்குப் பழியாக தொடரும் கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.