குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றவர்கள், மேஜிக் பேனாவை பயன்படுத்தி தேர்வெழுதியது தெரியவந்த நிலையில், இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவர் மேஜிக் பேனாவை தயாரித்து கொடுத்தது தெரியவந்ததால், அவரை கைது செய்தனர். யாரிடமிருந்து மேஜிக் பேனா வாங்கப்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, குரூப் 2 - ஏ தேர்வு முறைகேட்டில் 2வது இடைத்தரகராக செயல்பட்ட பாஸ்கர் என்பவரையும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஒ தேர்வு முறைகேடு தொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் அணிலடியை சேர்ந்த விஏஓ அமல்ராஜ் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தற்போது வரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.