டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று 'நிதி ஆயோக்' கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். நிதி ஆயோக் கூட்டத்துக்கு முன்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை முதலமைச்சர் பழனிசாமி சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை டெல்லி, தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் பழனிச்சாமி, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் திட்டங்களுக்கு அளிக்க வேண்டிய நிதி கோரிக்கைகளை முதலமைச்சர் அளித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த சந்திப்பை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் பழனிசாமி சந்திக்க உள்ளார்.