தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.ரங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சபரீசன் (13), ஹரிஸ் (12) ஆகியோர், பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகு மாயமான நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இரண்டு சிறுவர்களையும் ஒரு இளைஞர் அழைத்துச் செல்லும் காட்சியை கண்டறிந்தனர். அதன்பேரில், அதே பகுதியைச் சேர்ந்த கேசவபாலாஜியை பிடித்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தனது தாயுடன் சிறுவர்களின் தந்தைக்கு இருந்ததாகக் கூறப்படும் தகாத உறவு தொடர்பான ஆத்திரத்தில், பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலையை செய்தது தெரிய வந்துள்ளது.காட்டுப்புறா பிடித்துத் தருவதாக ஆசை காட்டி, தென்னந்தோப்பு பகுதியில் உள்ள கிணற்றுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று, இருவரையும் கிணற்றில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாக கேசவபாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையில், புறா பிடிக்கச் செல்வதாக நம்பி, கேசவபாலாஜியுடன் ஆர்வமாக நடந்து செல்லும் இரண்டு சிறுவர்களின் கடைசி சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், கேசவபாலாஜியின் வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது