வாரிசுச் சான்றிதழ் விவகாரத்தில் மேட்டுப்பாளையம் தாசில்தார் உத்தரவை எதிர்த்து மாரண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொய் தகவல்களைக் கூறி, வாரிசுரிமை சான்று பெற்று, சொத்துகளை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார். தந்தை மரணத்திற்கு பின், தான் மட்டுமே வாரிசு எனக் கூறி மாரண்ணன் விண்ணப்பித்த நிலையில், அதை நிராகரித்து தாசில்தார் உத்தரவிட்டார். பொய் தகவல்களைக் கூறியும், உண்மையை மறைத்தும், வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உண்மை தகவல்களை மறைத்து வாரிசுச் சான்று கோரி விண்ணப்பிப்பது தொடர்பான வழக்குகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதுபோல் குற்ற வழக்கு தொடராமல் உடந்தையாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.