தமிழகத்தில் நேற்று கொரோனாவால் இறந்த 18 பேரில் 15 பேருக்கு நீரிழிவு நோய் இருந்தது சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இது சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோயாளிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுள் 50வயதுக்கு மேல் உள்ள ஒரு பெண் உள்பட ஏழு பேருக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அதேபோல் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களுள் 40 வயதுக்கு மேல் 3 பெண்கள் உள்பட 8 பேருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. இதனால் அச்சத்தில் உறைந்துள்ள சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு சுகாதாரத்துறை சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. நாள்தோறும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி ஆகியவை செய்ய வேண்டும், பச்சை, புரதசத்து,நார்சத்து மற்றும் கனிமம் அதிகமுள்ள ஊட்டசத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும், உணவில் தவறாமல் இஞ்சி, பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு மற்றும் மிளகு போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும், நிலவேம்பு, கபசுரக் குடிநீரை முறையாக தயாரித்து அருந்த வேண்டும் என சர்க்கரை நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.