சென்னை தாம்பரம் அருகே 3 வயது சிறுவன் மீது தொலைக்காட்சி பெட்டி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் கவியரசு, தொலைகாட்சி பெட்டி மேல் இருந்த செல்போனை எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி தொலைகாட்சி பெட்டி சிறுவனின் தலையில் விழுந்தது. இதில் சிறுவன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளான்.
புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை - காதல் திருமணம் செய்த 20 நாட்களில் விபரீதம்
தென்காசி மாவட்டம் சங்குபுரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தீபிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த இருபது நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு படுக்கையறையில் அஜித்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தீபிகாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேகமாக சென்றதால் கார் கடைக்குள் புகுந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 பேர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கஸ்தூரி பாய் நகரை சேர்ந்த மணிகண்டன், தனது மனைவி உட்பட உறவினர்கள் நான்கு பேருடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். காமராஜர் சதுக்கத்தில் இருந்து டானிங்டன் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த வணிக வளாக கடைக்குள் புகுந்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டி கொலை - வெட்டி சாய்த்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலை
புதுச்சேரி அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டி கொல்லப்பட்டார்.
புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வார்டு மணி என்கிற ராமச்சந்திரன் காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்தார். இவர், தமது இரு சக்கர வாகனத்தில், சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் - காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கு
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என்பதால் காவலர் முருகனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சி.பி.ஐ-இன் பதில் திருப்தி அளிக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதி பாரதிதாசன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் - புதிய தகவல்
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இருமுறை ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனும், சுவப்னா சுரேஷும் சேர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 3 பேருக்கும் அமலாக்கத்துறையின் காவல் இன்று நிறைவடைந்த நிலையில், மூவருக்கும் வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எர்ணாகுளம் பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.