தமிழ்நாடு

பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்

குறைந்த அளவிலான பேரியம் கலந்த பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக குறைத்த உச்சநீதிமன்றம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது 40 நிமிடம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்தது. அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் பேரியம் உப்பு , சல்பர் போன்ற வேதிப்பொருட்கள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில் திருத்தம் கோரி தமிழக அரசும், பட்டாசு தயாரிப்பாளர்களும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னி, குறைந்த அளவில் பேரியத்தை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கும் புதிய முறை கடந்த ஆகஸ்டு மாதம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் தற்போது தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளால் 30 சதவிகிதம் சுற்றுசூழல் மாசு குறைந்துள்ளதாகவும், இது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார். பட்டாசுக்கு தடை கோரும் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஏற்கனவே பேரியத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதனை நீக்கும் வகையில் புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேரியம் பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், குறைந்த அளவிலான பேரியம் கலந்த பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

அப்போது பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஸ் சிங், பட்டாசு தொழிற்சாலைகளில் தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்யும் வகையில் சோதனை அமைப்பு ஒன்றை உருவாக்கலாம் என்று கூறினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் வைத்தியநாதன், வினோத் கன்னா ஆகியோர் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் வழியாக இந்த தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்களை பட்டாசு தொழிற்சாலைகளில் நிறுவலாம் என்று கூறினர் இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கள் குறித்து 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்