சென்னையில் "மணி மியூல்" எனப்படும் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்த இளைஞரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த மொய்தீன் கபார் என்பவர், தனது மகன் ரபீக்கை 3 பேர் வீடு புகுந்து கடத்திச் சென்று விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்தார்.
இரண்டு லட்ச ரூபாய் தரவில்லை எனில், தனது மகனை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, தனிப்படை போலீசார், ரபீக்கின் தந்தையை பணத்துடன் எழும்பூருக்கு அனுப்பி வைத்து, அவரை பின் தொடர்ந்து சென்று 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
அப்போது, போலீசார் விசாரித்ததில் ரபீக் தனது வங்கி கணக்குகள் மூலம் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை இழந்த தஞ்சாவூரை சேர்ந்த ஒருவர், ஆள் வைத்து அவரை கடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.