சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்த பாரதிபிரியன் என்ற மாணவன், மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வு எழுதிய நிலையில், அதில் 111 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததாக தெரிகிறது. இதனால் அரசு கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்படவே, தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றை அவரது பெற்றோர் நாடி உள்ளனர். அங்கு அவருக்கு கல்விக்கட்டணமாக 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, மருத்துவ படிப்பில் சேரலாம் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த பாரதிபிரியன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.