ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கான்சாபுரத்தில் தந்தை, மகனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. மங்கம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்த கணேசபாண்டி, அவரது மகன் கௌதம் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கும்பல் இருவரையும் வெட்டிவிட்டு தப்பியோடியது. பலத்த காயமடைந்த இருவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்களது உறவினர்கள், தாக்குதல் நடத்திய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் திருமண ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறின் முன்விரோதமே சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.