சிவகாசி அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டியை அவரது தோழியே நகை, பணத்திற்காக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கலாபுரம் திருமலைநாயக்கர் நகரை சேர்ந்த 84 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் தாயாரம்மாள் தனியாக வசித்து வந்தார். கடந்த 11ஆம் தேதி அவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். முதலில் இயற்கை மரணம் என நினைத்து இறுதி சடங்கு செய்ய முயன்றபோது, அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் செல்போன் மாயமானது தெரியவந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கோவையில் வசித்து வந்த அவரது தோழியான ஜமுனா சம்பவ நாளில் வீட்டுக்கு வந்தது சிசிடிவி மற்றும் செல்போன் பதிவுகள் மூலம் உறுதியானது. விசாரணையில், பணம் தர மறுத்ததால் நள்ளிரவில் தலையணையால் மூச்சுத்திணறச் செய்து கொலை செய்து, நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றதாக ஜமுனா ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.