நாகை மாவட்டம் சீர்காழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்வதி என்ற பெண் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றார். அவருக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தும் போது ஊசி உடைந்து உடம்பில் சிக்கி கொண்டது. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பார்வதிக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ அதிகாரிகள் முடிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் சுகாதார துறை வாகனத்தில் அழைத்து சென்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பார்வதியை பரிசோதித்த மருத்துவர்கள் நாளை அறுவை சிகிச்சை மூலம் உடைந்த ஊசி அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.