கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப 200-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. கடற்கரை ஓரமாக இருக்கும் விடுதிகள், கழிவுநீரை ராட்சத குழாய்கள் மூலம் சட்ட விரோதமாக கடலில் கலக்க விடுகின்றன. அதன்காரணமாக கடல் நீர் நிறம் மாறி, தூர்நாற்றம் வீசுவதுடன் மீன் பிடி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அருகிலேயே திருவேணி சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் புனித நீராடி வருவதால், அவர்களும் தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். சூரிய உதயத்தை காண வரும் அதிகாலை நேரத்திலும் தூர்நாற்றம் வீசுவதால் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இது குறித்து புகார் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதுடன், போராட்டத்தில் இறங்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.