கடந்த மாதம், கடைசி வாரத்தில் பொறியியல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்-லைனில் நடந்தன. இதன் முடிவுகள் நேற்று இரவு வெளியானது.
இந்த தேர்வு முடிவுகளில், ஏராளமான மாணவர்களின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக, இளங்கலை பட்டப் படிப்பில் இறுதி தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறி, முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், வளாக நேர்முகத் தேர்வு மூலம் தனியார் நிறுவனங்களுக்கு தேர்வு பெற்ற மாணவர்கள் வேலை பறிபோகும் என, அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முடிவுகளை நிறுத்தி வைத்துள்ள அண்ணா பல்கலைக் கழகம், மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களையோ அல்லது மீண்டும் மறு தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற விவரங்களையோ வெளியிடவில்லை.