பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்க முடியும் என்பதால், எந்த நேரத்திலும் நீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஆட்சியர் கதிரவன் உத்தரவின்பேரில், வெள்ளியம் பாளையம் புதூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்டோரா மூலமாக வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். பவானியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.