ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருக்கிறது, புஞ்சை புளியம்பட்டி. பெயரிலேயே புன்செய் என இருப்பதாலோ என்னவோ... இந்த ஊர்... இப்போது விவசாயத்தால் கவனம் பெறுகிறது. அதற்கு காரணம், 'பசுமை பேராயம்'. இது, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 50 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தொடங்கியுள்ள அமைப்பு.
ரசாயன உரங்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு வாழை, நெல், கரும்பு, மஞ்சள், பப்பாளி, சேனைக் கிழங்கு, கீரை, காய்கறிகள், தக்காளி என இயற்கை உரங்களை கொண்டு விளைவிக்கின்றனர், இவர்கள். மாட்டு சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களே, இவர்களின் தாரக மந்திரம்.
அமைப்பில் உள்ள விவசாயிகள் அனைவரும் மாதந்தோறும் யாராவது ஒரு விவசாயி தோட்டத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கலந்துரையாடுவதோடு, வேளாண் வல்லுநர்களை அழைத்து வந்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்கின்றனர்.
தனியாக இயற்கை விவசாயம் செய்து, விற்பதில் சிக்கல் இருப்பதால், குழுவாக இணைந்து செயல்படுவதாகவும், மக்களுக்கு தரமான விளைபொருளை வழங்குவதில் திருப்தியடைவதாகவும், இவர்கள் கூறுகின்றனர்.
புஞ்சை புளியம்பட்டியில் விதைக்கப்பட்டுள்ள 'பசுமை பேராயம்' தமிழகம் முழுவதும் கிளை பரப்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்