சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - நீதிபதி முத்துக்குமரனை இப்படியொரு தீர்ப்பு எழுத வைத்த அந்த ஒரு காரணம்
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை சம்பவம் முழுக்க முழுக்க மனித கண்ணியத்தை மீறும் செயல் என்றும், இதனை நீதிமன்றம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது எனவும் நீதிபதி முத்துக்குமரன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இருவரையும் கொல்லும் நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறார்கள் என்றும், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்சத் தண்டனையை வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தியதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க மனித கண்ணியத்தை மீறும் செயலாக அமைந்திருக்கிறது என்றும், இதனை நீதிமன்றம் சாதாரணமாக கடந்துசொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா காலகட்டத்தில் கடையைத் திறந்து வைத்திருந்தார்கள் என்பதற்காக இப்படித் தாக்கியிருக்கிறார்கள் என்றும், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக விசாரித்திருக்காவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.. நிராயுதபாணியாக நின்றவர்களைத் தாக்கிய இவர்களை மன்னிக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்ட நீதிபதி, அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள் என்றும், வேலியே பயிரை மேய்ந்தது போல மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையே அவர்களைத் தாக்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். இந்தச் செயலைப் பார்க்கும்போது மனம் வெந்து போகிறது என கூறிய நீதிபதி, 'பென்னிக்சின் தாயாரின் துக்கத்தை யாரும் தீர்க்க முடியாது என்றும், ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பிடுங்கப்பட்டுள்ளது எனவும், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது அரிதினும் அரிதான வழக்கு என குறிப்பிட்டுள்ள நீதிபதி, இப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, 14 வருடங்களில் வெளியில் வந்துவிடலாம் என நினைக்கலாம், ஆனால், அப்படி விட்டுவிட நீதிமன்றம் தயாராக இல்லை என்றும் நீதிபதி முத்துக்குமரன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.