சிவதாபுரத்தில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், சேலத்தாமன்பட்டி ஏரி உடைந்து குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. பனங்காடு, அம்மன் நகர் உள்ளிட்ட 15 நகர் முழுவதும் உள்ள வீடுகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. மூன்று நாட்களாகியும் வெள்ளநீர் வடியாமல் தேங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். ஆட்சியர், அரசு அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடுவதாகக் கூறிய மக்கள், தண்ணீரை அகற்ற இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினர். குடியிருப்புகளில் குளம் போல் தேங்கி கிடக்கும் வெள்ளநீரால், சிவதாபுரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.