ரவுடி எலி கார்த்தி உட்பட 11 பேர் கைது புதுச்சேரியில் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்கச் சதித்திட்டம் தீட்டிய பிரபல ரவுடியான 'எலி' கார்த்தி உள்ளிட்ட 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தட்டாஞ்சாவடி மார்க்கெட்டிங் கமிட்டி வளாகத்தில் பதுங்கியிருந்த இந்தக் கும்பலை, கோரிமேடு மற்றும் தன்வந்தரி நகர் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள், இரும்பு கம்பிகள் மற்றும் முகமூடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட கார்த்தி மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிடிபட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.