சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லக் கூடிய வடமாநிலத்தவர்களை மட்டும் குறி வைத்து செல்போன் மற்றும் பணம் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புடன் பகுடி என்பவர், தாம்பரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 28ஆம் தேதி சொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது, முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் இல்லை என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். இதை கவனித்த வட மாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர், குறைந்த விலையில் டிக்கெட் வாங்கி தருவதாக கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். சேப்பாக்கம் அக்பர் தெரு அருகே ஆட்டோ வந்தவுடன், புடன் பகுடியிடம் இருந்து செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்று விட்டார். இது குறித்து, புடன் பகுடி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து, 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வடமாநிலத்தில் இருந்து சென்னை வந்து வேலை செய்து பின்னர், சொந்த ஊர் திரும்ப கூடிய வட மாநிலத்தவர்களை மட்டுமே குறிவைத்து, பணம் மற்றும் செல்போன் பறிப்பது தெரியவந்தது.