பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையிடம் புகார் மனு அளித்த15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினர். உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வின் உத்தரவைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, புகார் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். அதனை ஏற்று மனுக்கள் திரும்ப பெறப்பட்டதால், வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.