Puducherry | Protest | ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்.. ஸ்பாட்டுக்கு ஓடிவந்த போலீஸ்
புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு பகுதியில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு குடியிருப்புகளில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், முக்கிய சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் மற்றும் முதியவர்கள் வீட்டு பயன்பாடு, சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கே தண்ணீர் கிடைக்காததால் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடைந்த குடிநீர் குழாய் விரைவில் சீரமைக்கப்பட்டு விநியோகம் சீராக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.