சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் கட்டணத்தை ஆட்டோ மற்றும் வேன் உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளனர்.
மாதக் கட்டணத்தை 100 முதல் 200 ரூபாய் அளவுக்கு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் ஒரு லட்சம் உள்பட தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோக்கள் ஓடும் நிலையில், முத்தரப்பு கமிட்டி அமைத்து, ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என ஆட்டோ தொழிலாளர் தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன..
தற்போதைய எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப, குறைந்த பட்ச மற்றும் கிலோ மீட்டருக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, தண்டல் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை இருப்பதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு முடிந்த அளவிற்கு எரிபொருள் மீதான வரியை குறைப்பதுடன், ஆட்டோ உள்ளிட்ட பலவகையான கட்டண உயர்வில் இருந்து மக்களை காப்பாற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.