ஆன்லைனில் ஆர்டர் செய்த சாக்லேட் சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நலக்குறைவு சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில், ஆன்லைனில் வாங்கப்பட்ட காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்ட 10 வயது சிறுமி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்றல் நகரைச் சேர்ந்த ஓமனா என்பவர், செயலி மூலம் 900 ரூபாய் மதிப்பிலான சாக்லேட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட சாக்லேட்டை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிறுமிக்குக் கடும் வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சாக்லேட் பெட்டியை சரிபார்த்தபோது, அது காலாவதியானது எனத் தெரியவந்தது. இது குறித்து அந்த நிறுவனத்திடம் புகார் அளித்தபோது, சாக்லேட்டை மாற்றித் தருவதாகக் கூறி அலட்சியமாகப் பதிலளித்ததாக கூறப்படுகிறது. உணவுப் பாதுகாப்புத் துறையில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கும் பெற்றோர், ஆன்லைனில் உணவுப் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.