தமிழகத்தை உலுக்கிய நெல்லை கொலை வழக்கில், திமுக பெண் பிரமுகர் சங்கரன்கோவில் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு உள்ளார். நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும், கடந்த 23 ம் தேதி, வீடு புகுந்து, படுகொலை செய்யப்பட்டனர். தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், சிசிடிவி காட்சி மூலம் ஆதாரங்கள் சிக்கின.
உமா மகேஸ்வரி கொலை : ஆயுதங்கள் - ஸ்கார்பியோ கார் பறிமுதல்
இந்த காட்சிகளின் அடிப்படையில், சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை, தனிப்படை போலீசார் மதுரையில் மடக்கி பிடித்தனர். கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களையும், ஸ்கார்பியோ காரும் பறிமுதல் செய்யப்பட்டன. உமா மகேஸ்வரியிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கப்பணம் குறித்து, கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசியல் பகை காரணமாக இந்த கொலை நிகழ்ந்தது உறுதியாகி உள்ளதாக நெல்லை போலீசார் தெரிவித்தனர்.