திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
நடைபெற்று வந்த நவராத்திரி திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு நிறைவு பெற்றது. முன்னதாக நடைபெற்ற பரிவேட்டை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் அம்மன் திரிபுரசுந்தரி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
சமயபுரம் நவராத்திரி நிறைவு விழா...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி நிறைவு விழாவில், அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நடைபெற்ற வன்னி மரத்தில் அம்பு எய்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மதுராந்தகம் வன துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் கோட்டை புஞ்சை, வன துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி கடைசி நாள் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், அம்மன், சிவன் பிரம்மா, விஷ்ணு, சரஸ்வதி உள்ளிட்ட வேடங்களை அணிந்து நடனமாடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரத்தில் கோலாகலமாக நிறைவடைந்த தசரா திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தசரா திருவிழா, மகர்நோன்புடன் நிறைவு பெற்றது. வெள்ளி குதிரை வாகனத்தில் மாடுகள் பூட்டப்பட்ட ரதத்தில் முத்துமாரியம்மன் நகர்வலம் வந்து மகர்நோன்பு திடலில் உள்ள வன்னிமர அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் அச்சப்பன் கோவில் திருவிழா...
நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் அச்சப்பன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான குரும்பா இன மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான, சாட்டையால் அடித்து பேய் விரட்டும் சடங்கில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மண்டியிட்டபடி கைகளை மேலே துாக்கியிருப்படி நின்று இருந்த பக்தர்களை கோவில் பூசாரி நடனம் ஆடியபடி சாட்டையால் அடித்து பேய் ஓட்டினார். பின்னர் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மணப்பாறை பொன்னர்-சங்கர் கோவிலில் கோலாகல திருவிழா
திருச்சி மாவட்டம் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் நடைபெற்ற அம்பு போடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பொன்னர்-சங்கர் குதிரை வாகனத்தில் முன்செல்ல, அதன்பின்னே வெள்ளையானை வாகனத்தில் சென்ற பெரியக்காண்டியம்மன் வாழை மரத்தில் அம்பு எய்து மகார நோன்பு நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.
பழனி மகிஷாசுர வதம் - ஏராளமானோர் பங்கேற்பு
பழனியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகிஷாசுர வதம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வாழைமரம் மற்றும் வன்னி மரத்தில் அம்பெய்து மகிஷாசூர வதம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.