மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜான்சி ராணி தொடர்ந்த பொதுநல வழக்கில், 18 வயதுக்கு கீழ் 32 கோடி பேர் உள்ள நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.ஒருமுறை தாக்கினால், மீளமுடியாத நோயாக உள்ள போலியோ, சிறுவர்கள், இளைஞர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா மற்றும் நடிகர் சங்க செயலர் ஆகியோரை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டு இருந்தனர்.நடிகர்கள் சூர்யா, விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பினர் பல சேவைகள் பல செய்துவருவதாக கூறினர்.தென்னிந்திய நடிகர் சங்க செயலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய ஒத்துழைப்பு வழங்க சங்கம் தயாராக உள்ளதாகவும், தாமாக முன்வரும் நடிகர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.