வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் தனசேகர் என்பவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி, மகாலட்சுமி என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தன. ஜெயந்திக்கும், 54 வயதான அவரது பெரிய மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் அவரது 2 பெண் குழந்தைகளை கடந்த 27ஆம் தேதி, வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றார். வேளாங்கண்ணி சென்று பல நாட்கள் ஆகியும், வீடு திரும்பாததால், ஜெயந்தியின் கணவர் தனசேகர் மற்றும் அவரது உறவினர்கள் அச்சம் அடைந்தனர்.
வேளாங்கண்ணியில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கிய ஜெயந்தி மற்றும் கோபாலகிருஷ்ணன், மகள் மகாலட்சுமி முகத்தின் மீது தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தததாக கூறப்படுகிறது. மகளை கொலை செய்துவிட்டு, லாட்ஜ் அறையை பூட்டிவிட்டு மற்றொரு மகளுடன் வேளாங்கண்ணியில் இருந்து தப்பியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்ற மூன்று பேரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தகாத உறவினால் ஒருமகளை கொலை செய்துவிட்டு மற்றொரு மகளுடன் ஜெயந்தி ரயில் முன் பாய்ந்த சம்பவம் நெல்வாய் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.