விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அங்குள்ள T.புதுப்பாளையம், மேலகொந்தை , பனையபுரம், துறவி, வாக்கூர், ராதாபுரம், சிந்தாமணி ஆகிய இடங்களில் வேன் மூலம் செய்த பிரசாரத்தின்போது பேசிய அவர், அதிமுக அரசால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை என்றும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். அதிமுக மீது, ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பாமக, இப்போது, அதே கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற திண்ணை பிரசாரத்தில் அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசியருக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். எழுசெம்பொன், கிராமத்தில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு வாக்கு சேகரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். பள்ளி நேரத்தில் மாணவிகள், தேர்தல்பிரசார கூட்டத்தில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.