#manjolai #nellainews நெல்லை மாஞ்சோலையில் காட்டு மாடு தாக்கியதில் காயம் அடைந்த மூதாட்டி, 10 மணி நேர போராட்டத்திற்கு பின் தீப்பந்த வெளிச்சத்தில் மலையில் இருந்து கீழே கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாஞ்சோலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இயங்கி வந்த தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டதால் அங்கிருந்த மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் நிறுத்தப்பட்டன. பெரும்பாலான தொழிலாளர்கள் மாஞ்சோலையை விட்டு வெளியேறிய நிலையில், சில தொழிலாளர்கள் மட்டும் மாஞ்சோலை பகுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், மாஞ்சோலை ஊத்து பகுதியில் வசித்து வரும் வள்ளியம்மாள் என்ற மூதாட்டியை நேற்று மாலை காட்டு மாடு தாக்கியுள்ளது. இதில் மூதாட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பெற முடியாமல் பல மணி நேரம் போராடியுள்ளார். தகவலறிந்து நள்ளிரவில் புறப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிக்குள், வனத்துறையினரின் உதவியுடன் ஊத்து பகுதியை சென்றடைந்தனர். அங்கு மின்சாரம் இல்லாததால், கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினர். படுகாயமடைந்த மூதாட்டி முழுமையான சிகிச்சை பெற 10 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. மூதாட்டிக்கு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.