3,000 ஆண்டுகள் பழமையான குகை, பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு மதுரை மாவட்டம் பேரையூர் அருகே, சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் ஆதிகால குகை, வெண்சாந்து பாறை ஓவியங்கள் மற்றும் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட கள ஆய்வில், மொட்டமலை தென்புறத்தில் நீண்ட குகையும், வேட்டையாடுதல், ஊர்வன மற்றும் மனிதர்கள் தொடர்பான காட்சிகள் கொண்ட பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டன. மேலும், இரும்பு உருக்கு கழிவுகள் மற்றும் சுடுமண் குழாய்கள் கிடைத்துள்ளதால், அப்பகுதியில் பழங்காலத்தில் இரும்பு உருக்கும் தொழில் நடைபெற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.