ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த தனது தந்தை வெற்றிவேல், கடந்த 2010 ஆம் ஆண்டு சமூக விரோதிகளால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தென்காசி முள்ளிக்குளத்தைச் சேர்ந்த அவரது மகன் அசோக்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் தந்தை இறந்ததும், கருணை அடிப்படையில் அவரது தாயார் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டதாகவும், அப்போது 18 வயதானதும், கருணை வேலையை மகனுக்கு வழங்குமாறும் தனது தாயார் கடிதம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது 18 வயது பூர்த்தி அடைந்த நிலையில், தாயாருக்கு வழங்கிய கருணை வேலையை தமக்கு வழங்க கோரி மனு அளித்தும், இதுவரை தமக்கு வேலை வழங்கப்படவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கருணை வேலை கேட்டு மனுதாரர் அனுப்பியுள்ள மனுவை உள்துறை செயலர் 4 வாரத்தில் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.