கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் பல வீடுகள் சேதமடைந்தன. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கன்னியாகுமரியில் தொடர் மழை பெய்து வருகிறது. கடையாலுமூடு அருகே உள்ள கொண்டை கட்டி மலையில் ஏற்பட்ட மண்சரிவால், மலை கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின. வீடுகளின் அருகில் இருந்த ஆடு மாடுகள் பல மண் சரிவில் சிக்கி உயிரிழந்தன. இச்சம்பவம் பகலில் நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. ஆனால் வாழை, ரப்பர் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் பெருமளவில் பாதிப்படைந்தன. கடந்த 10 தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு அதை விட கடுமையாக உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.