உலக பேமஸான `கோவில்பட்டி’ கடலை மிட்டாய்க்கு திடீர்னு என்னாச்சு.. தமிழகத்தை 1 செகண்ட் ஸ்தம்பிக்க விட்ட மாற்றம்
விலையுயர்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய் நிலக்கடலை, வெல்லம் ஆகிய மூலப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர் கடலை மிட்டாய் என்றாலே அது கோவில்பட்டிதான். சந்தையில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு என்று தனி மவுசு உண்டு. அதிலும் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற பின்னர் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என கோவில்பட்டி கடலை மிட்டாயின் விற்பனை அதிகரித்துள்ளது. மறுபுறம், கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர்கள் குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த கடலை மிட்டாய்க்கு மிகவும் முக்கியமான மூலப்பொருள் நிலக்கடலை. சமீபகாலமாக நிலக்கடலையின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை 9 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 6 ஆயிரத்து 500 ரூபாய் விலை உயர்ந்து 16 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மற்ற மூலப்பொருட்களான வெல்லம், ஏலக்காய் மற்றும் பேக்கிங் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், கடலை மிட்டாயின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் கடலை மிட்டாய் விலையை 25% உயர்த்த கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது ஒரு கிலோ கடலை மிட்டாய் 200 முதல் 300 ரூபாய் என மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் 25 சதவீத உயர்வினால் இனி 220 முதல் 320 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட உள்ளது.