Karnataka || தேர்வு எழுதிய தாய்.. குழந்தைக்கு தொட்டில் கட்டி தாலாட்டிய பெண் போலீஸ் பெங்களூருவில் காவலர் தேர்வு எழுத வந்த தேர்வரின் குழந்தையைப் பெண் காவலர்கள் தாலாட்டுப் பாடி பராமரித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது... கர்நாடகாவில் நடைபெற்ற காவலர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வின் போது, பெண் தேர்வர் ஒருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் தேர்வு மையத்திற்கு வந்திருந்தார். குழந்தையைப் பராமரிப்பு அறையில் விட்டுவிட்டு, அவர் தேர்வு அறைக்குச் சென்றவுடன், குழந்தை தொடர்ந்து அழத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 'சி.கே. அச்சுக்கட்டு' காவல் நிலையப் பெண் காவலர்கள், அழுதுகொண்டிருந்த குழந்தையைப் பாசத்தோடு கைகளில் தூக்கி வைத்து அழுகையை சமாதானப்படுத்தினர். பின்னர், சேலையில் தொட்டில் கட்டித் தாலாட்டுப் பாடி குழந்தையைத் தூங்க வைத்ததுடன், தாய் தேர்வு எழுதி முடித்து வரும் வரை கவனமாகப் பராமரித்தனர். காவலர் சீருடையில் இருந்தாலும் தாய்மை உணர்வுடன் செயல்பட்ட பெண் காவலர்களின் இந்த மனிதநேயமிக்கச் செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.