சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து பேசியதை ஓ.பன்னீர்செல்வம், மறைக்க முயற்சிப்பது வேதனையளிப்பதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர்
ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர் முதல்வர் ஸ்டாலின் என கூறியுள்ளார். ஆனால் அ.தி.மு.க. அரசு ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியது, போலீஸ் தடியடி நடத்தியதும் உண்மை என அந்த அறிக்கையில் கூறியுள்ளார். போராட்டத்திற்குப் பணிந்து இளைஞர்களின் உணர்வுகளை இனியும் எதிர்க்க முடியாது என்று தெரிந்த பிறகே ஜல்லிக்கட்டுக்குச் சட்டம் இயற்ற ஒப்புக் கொண்டது என ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தமது பதிலுரையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும்" என்றும் "ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்தார்கள்" என்று கூறியதை மறைக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டு இளைஞர்களின் போராட்டத்தை அதிமுக அரசு, எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினீர்கள்- களங்கப்படுத்தினீர்கள் என்பதை, முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல ஒரு முறை ஆற அமர்ந்து சட்டமன்ற பதிலுரையை படித்து பாருங்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.