ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் மேல்முறையீடு ஏற்கப்படுவதாகவும், 2 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீன் தொகையாக செலுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது எனவும் பானுமதி அமர்வு நிபந்தனை விதித்துள்ளது. இதுதவிர, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது - அறிக்கை விடக்கூடாது என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ கூடாது என்றும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.