அரியவகை மரபணு நோயால் குழந்தை பாதிப்பு - பிரதமர் மோடிக்கு வைகோ வேண்டுகோள்
குமாரபாளையத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற பிரதமர் மோடி உதவ வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர், 23 மாத பெண் குழந்தையான மித்ரா. இவர் ஆட்டோசோமல் ரெசெஸ்ஸிவ் ஸ்பைனல் ஆட்ரோஃபி என்ற அரியவகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டி, பிரதமர் மோடிக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில், இந்த நோயைக் குணப்படுத்தும் ஒரே மருந்தான ஜோல்ஜென்ஸ்மாவின் விலை 16 கோடி ரூபாய் என்றும், குழந்தை இரண்டு வயதை நிறைவு செய்வதற்குள் இதனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுவிட்சர்லாந்து நாட்டின் நோவார்டிஸ் நிறுவனம், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இஷானி என்ற குழந்தைக்கு, குலுக்கல் முறையில் இந்த மருந்தை இலவசமாக வழங்கியதை சுட்டிக் காட்டியுள்ள வைகோ, அதே நிறுவனத்திடம் இருந்து ஜோல்ஜென்ஸ்மா மருந்தை, தமிழ்நாட்டுக் குழந்தை மித்ராவுக்கு பெற்றுத் தந்து, உயிரைக் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.