அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் தொடர்பாக மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் இறுதி விசாரணை நடத்தும். இதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட துறையால் 4 மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த இதுவரை சம்பந்தப்பட்ட துறைகளால் அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதில் 57 பேர் அரசு அதிகாரிகள் என்றும், 45 பேர் பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 வழக்குகள் மத்திய பணியாளர் துறை அமைச்சகத்திலும், ரெயில்வே அமைச்சகம் மற்றும் உத்தரபிரதேச மாநில அரசிலும் தலா 5 வழக்குகளும் விசாரணைக்காக அனுமதி கோரி காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு, அமலாக்கத்துறை இயக்குனரக உதவி இயக்குனர், வருமான வரித்துறை அதிகாரி ஆகியோர் மீதான லஞ்ச புகார் தொடர்பாக விசாரணை நடத்த இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் , ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, இமாச்சல் பிரதேஷ், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்கான அனுமதி கிடைக்கவில்லை என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.