``என் பிள்ளைய பின்னால நின்னு வெட்டிருக்கான்.. அவன் எவன்னு தெரிஞ்சே ஆகணும்’’ - மயிலாப்பூர் பயங்கரம்.. கொதிக்கும் தாய்
#mylaporeissue #chennailatestnews
சென்னை மைலாப்பூரில் நண்பரை பார்க்க வந்த 19 வயது இளைஞரை, அடையாளம் தெரியாத மூன்று பேர் வெட்டியதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சென்னை வேளச்சேரி பாலாஜி நகரைச் சேர்ந்த 19 வயதான சத்தியசீலன், நண்பரை பார்ப்பதற்காக மைலாப்பூர் வீரபத்திரன் தெருவுக்கு சென்றுள்ளார். நண்பர்களுடன் சத்தியசீலன் பேசிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் திடீரென கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த சத்தியசீலனை நண்பர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சத்தியசீலன், முதலில் மைலாப்பூரில் வசித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் வேளச்சேரிக்கு குடிபெயர்ந்துள்ளார். கொலைக்கு காரணம் முன்விரோதமா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். நண்பரை பார்க்கச் சென்ற தனது மகன், உணவு சாப்பிட செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பின்னர் பின்புறமாக வந்தவர்கள் மகனை வெட்டிக் கொலை செய்ததாகவும் சத்தியசீலனின் தாய் தெரிவித்துள்ளார். தனது மகனை கொலை செய்த நபர் யார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்... மேலும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை சத்தியசீலனின் உடலை வாங்கப் போவதில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நண்பரை சந்திக்கச் சென்ற 19 வயது இளைஞர், கொடூர தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் மைலாப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.