"என்னனே தெரியல இப்படி இருக்கு..." - குமுறும் தாம்பரம் மக்கள் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 3-ல், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எம்.எம்.டி.ஏ. நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு சிட்லபாக்கத்தில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர், கடந்த இரண்டு மாதங்களாக நிறம் மாறி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதுடன், கழிவுநீர் கலந்தது போல் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாநகராட்சி பணியாளர்களிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்றும், தொடர்ந்து புகார் அளித்தால் குடிநீர் விநியோகத்தை நிறுத்திவிடுவதாக கூறியதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து, பாதுகாப்பான குடிநீர் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.