சென்னை எம்ஜிஆர் நகர் தியாகி குப்பன் தெருவைச் சேர்ந்த 62 வயதான காவலாளியும், அவருடன் வீட்டில் வசித்து வந்த லட்சுமி என்ற பெண்ணும் தீயில் எரிந்த நிலையில் சத்தமிட்டனர். ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் மாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். காவலாளி கோவிந்தசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், கோவிந்தசாமியுடன் தங்கி இருந்த லட்சுமியின் கணவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, சென்னை எம்ஜிஆர் நகர் சூளை பள்ளத்தை சேர்ந்த 38 வயதான செந்தில் வேல்முருகனுக்கும், அவருடைய மனைவி லட்சுமிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில், 62 வயதான கோவிந்தசாமி என்பவருடன் 34 வயதான லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோவிந்தசாமி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 20 நாட்களுக்கு முன் செந்தில் வேல் முருகனுக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதயடுத்து, லட்சுமி, கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று தங்கியிருக்கிறார். இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே மனைவியை தனது வீட்டுக்கு வருமாறு, கணவர் செந்தில் வேல்முருகன் 20 நாட்களாக பலமுறை அழைத்திருக்கிறார் லட்சுமி வர மறுத்ததோடு, கோவிந்தசாமியும் செந்தில் வேல் முருகனை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன், பெட்ரோல் கேனுடன் கோவிந்தசாமியின் வீட்டுக்கு வந்து, அவர் மீதும், லட்சுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயால் இருவரும் அலறி துடித்த நிலையில், தப்பியோடி விட்டதாக செந்தில் வேல்முருகன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, செந்தில்வேல் முருகனை போலீசார் கைது செய்தனர். குடும்பம் நடத்த வராத மனைவியை, கணவனே, கள்ளக்காதலனோடு தீ வைத்து எரித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.