கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள செட்டிப்பட்டறை ஏரி, களத்துமேடு ஏரி ஆகிய இரு நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து பொது நல வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, களத்துமேடு ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
அப்போது அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இவ்வழக்கில் மெத்தனப் போக்குடன் அதிகாரிகள் நடந்து கொண்டதை ஏற்க முடியாது என்றும், நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். ஒரு மாதத்திற்குள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். இல்லையெனில் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் ஆஜராக நேரிடும் என எச்சரித்துள்ளனர்.