ஒருவழியாக சீர்காழியில் மீட்கப்பட்டார் சிறுமி.. தானாகவே இறங்கி வந்தார்.. ஹீரோவான ஆட்டோ டிரைவர் #guduvancherychildmissing #childmissingcase சென்னை கூடுவாஞ்சேரி அருகே காருடன் கடத்தப்பட்ட 12 வயது சிறுமி, சீர்காழியில் ஆட்டோ ஓட்டுநர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்... சென்னை கூடுவாஞ்சேரி அருகே, காரில் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுமியை காருடன் மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வல்லாஞ்சேரி பகுதியில் உள்ள உணவகத்தில் பெற்றோர் சாப்பிடச் சென்றிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மலையரசன் தனது குடும்பத்துடன் காரில் பயணித்தபோது, வல்லாஞ்சேரி பகுதியில் உள்ள உணவகத்தில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகள் ரிஷிகாவை, மர்ம நபர் காருடன் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது மகளையும் காரையும் காணாததால் அதிர்ச்சியடைந்து, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்கு திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மர்ம கார் வந்துள்ளது. காரிலிருந்து இறங்கிய சிறுமி, தன்னை யாரோ கடத்தி வந்துவிட்டதாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சிறுமியைப் பத்திரமாக மீட்டு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். சிறுமி மீட்கப்பட்ட நிலையில், அவரை அழைத்து வந்த மர்ம நபர் காருடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கடத்தலுக்கான காரணம் என்ன, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிய நபரையும் காரையும் பிடிக்க சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.