கஜா புயல் நிவாரணத்துக்காக நாகை பகுதிக்கு வந்த லட்சக் கணக்கான ரூபாய் பொருட்களை பதுக்கிய அதிகாரி, தமக்கு வேண்டியவர்களுக்கு அவற்றை வழங்கிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பொருள் வாணிபக் கிடங்குகளில் இருந்து அவ்வப்போது, மூட்டை மூட்டையாக வாகனங்களில் சிலர் அரிசி, பருப்பு, எண்ணெய், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை அள்ளிச் செல்வதை பார்த்த மீனவர்கள், இது குறித்து கிடங்கு மேலாளர் மோகனிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், அவர் திணறியதுடன் அங்கிருந்து வெளியேறினார். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.