TNEB | மின்கட்டண குளறுபடி..? மின்வாரியம் அதிரடி முடிவு
தமிழ்நாட்டில் வீட்டு மின் நுகர்வோருக்கு மின் கட்டணத்தில் திடீர் உயர்வோ அல்லது குளறுபடிகளோ ஏற்படுவதைத் தடுக்க, மின் கட்டண வசூலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து நேரில் மறுசரிபார்ப்பு செய்யும் புதிய நடைமுறையைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அமல்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு மின் இணைப்புகள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த மாதங்களைக் காட்டிலும் மின் கட்டணம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருந்தால், அந்தக் குறிப்பிட்ட மின் இணைப்புகளுக்கான கட்டண வசூல் உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் இவ்வாறு தனியாகப் பட்டியலிடப்படும் இணைப்புகளை, கட்டண உயர்வின் அளவிற்கு ஏற்ப வருவாய் மேற்பார்வையாளர் முதல் உதவிச் செயற்பொறியாளர் வரையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் மீட்டர் ரீடிங் தவறாக இருந்தது கண்டறியப்பட்டால், 3 வேலை நாட்களுக்குள் பில் திருத்தி அமைக்கப்படும் என்றும் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது உறுதியானால், அத்தொகை அடுத்த மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும் என்றும் தவறான மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள மின்வாரியம், மொபைல் செயலி மற்றும் புளூடூத் மூலம் தானாகப் பதிவாகும் மீட்டர் ரீடிங்குகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.