தமிழகத்துக்கு முதலீடுகளை திரட்ட அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சான்ஹீசே நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், அமெரிக்க தொழில் முனைவோர் என்ற அமைப்பின் உதவியுடன், தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு உதவிகள் வழங்கும் டிஜிட்டல் ஆக்சிலரேட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், தமிழக தொழில் முனைவோர் தொடங்கும் புதிய தொழிலுக்கான 10 சதவீத பணத்தை தமிழக அரசு வழங்கும் என்றும், இதற்கு 50 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து யாதும் ஊரே திட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலிஃபோர்னியா மாகாணம் மற்றும் மேற்கு அமெரிக்க பகுதிகளை சேர்ந்த தமிழ் அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர். தமிழர்களை ஒருங்கிணைக்கும் முதலமைச்சரின் இந்த திட்டத்தை தமிழ் அமைப்புகளும், கூட்டத்தில் பங்கேற்றவர்களும் வெகுவாக பாராட்டினர்.