தமிழ்நாடு

இன்று மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,புயல் கடக்கும் போது, மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவித்தார். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.கடலூர்,நாகை,திருவாரூர், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கும் மிதமான மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கஜா புயல் - கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழைக்காக 32 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த அதிகாரிகளே, கஜா புயல் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களான, கடலூருக்கு ககன் தீப் சிங் பேடி, நாகைக்கு ஜவஹர், புதுக்கோட்டைக்கு சம்பு கல்லோலிக்கல், ராமநாதபுரத்துக்கு சந்திரமோகன், திருவாரூருக்கு மணிவாசன் ஆகிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் கரையைக் கடக்கும்போது, கடல் அலை ஒரு மீட்டர் உயரத்துக்கு எழும் என்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதாலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

"கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 249 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன"

"கஜா" புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில், பொதுமக்கள் தங்குவதற்கு 249 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மணிவாசகன் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் - ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில்கள் ரத்து

கஜா புயல் காரணமாக ராமேஸ்வரத்துக்கு வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் வாகையாடி மூர்த்தி தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் ரயில்கள் மானாமதுரையிலிருந்து புறப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புயலுக்கு பின்பு ரயில்களை இயக்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - கிராமங்களில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர்

கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கட்டுமாவடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் கணேஷ், ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும், 586 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக, தெரிவித்தார்.

கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கும் கஜா புயல் : மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில் ஆய்வு

கஜா புயல் காரணமாக கடலோர காவல் குழுமம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு, வாகனங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட, கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் உடன் இணைந்து நிவாரண முகாம்களை ஆய்வு செய்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி தென்பெண்ணை ஆற்றின் முகத்துவாரம், தாழங்குடா பகுதியிலும், கெடிலம் ஆற்றின் முகத்துவாரம், தேவனாம்பட்டினம் பகுதியிலும் ஜேசிபி எந்திரம் மூலம் கடலுடன் இணைக்கப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒலிப்பெருக்கி மூலம், அறிவிக்கப்பட்டது.

கஜா புயல் - சிதம்பரம் வந்த தேசிய பேரிடர் மீட்பு குழு

இதனிடையே கடலூர் மாவட்டத்தில் புயல் பாதிப்பால் கீழே விழும் மரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை அகற்றும் பணி உள்ளிட்டவைக்காக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிதம்பரத்திற்கு வந்துள்ளனர். தலா 25 பேர் கொண்ட இரண்டு குழுவினர் கமாண்டர் விஜயகுமார் தலைமையில் எம்ஜிஆர் திட்டு, பிச்சாவரம், முடசல்ஓடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விளக்கம்

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து மழையின் போது பாதிக்கப்பட்ட ஜெயராம் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கமாண்டர் அமர் மற்றும் வட்டாச்சியர் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர் . பின்னர் அங்குள்ள மக்களுக்கு, பேரிடர் காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் விளக்கம் அளித்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி